காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு: பரமேஸ்வர் சொல்கிறார்
காங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பரமேஸ்வர் கூறினார்.கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு,
இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் பா.ஜனதாவுக்கு கிடைக்காவிட்டால், எடியூரப்பா அரசு கவிழ்ந்துவிடும். அவ்வாறான சூழ்நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு எங்கள் கட்சி மேலிடம் ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஒருவேளை கூட்டணி அமையாவிட்டால், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரும். அரசியலில் என்ன நடக்கும் என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது. கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இல்லை. ஆயினும் நாங்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம்.
இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் யாரும் வெற்றி பெற மாட்டார்கள். மக்கள் மீண்டும் அவர்களை வெற்றி பெற வைக்க மாட்டார்கள். இந்த இடைத்தேர்தல் கர்நாடக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சி தாவியவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இது எதிர்காலத்தில் கட்சி தாவ நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.