பொது இடத்தில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை

பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2019-11-29 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் வருமாறு:-

விவசாயி பாலசுப்பிரமணியன்:- சேலம் சேகோ சர்வ் என்கிற கூட்டுறவு அமைப்பில் மில் அதிபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அதில் விவசாயிகளை இணை உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தி உள்ளோம். ஆலை அதிபர்கள் மரவள்ளி கிழங்கின் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதை தவிர்ப்பதோடு, விவசாயிகள், ஆலை அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி மரவள்ளியின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாமக்கல் மாவட்டத்திற்கு என தனியாக சேகோ சர்வ் அலுவலகம் அமைப்பதோடு, ஜவ்வரிசி விற்பனை மையம் அமைக்க வேண்டும். மின்கோபுரங்கள் அமைக்கப்படும் நிலங்களுக்கு அருகே உள்ள நிலங்களுக்கும் ந‌‌ஷ்ட ஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் மெகராஜ்:- பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி முருகேசன்:- பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காயம் அதிக அளவில் சேதம் அடைந்து உள்ளது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து இதுவரை ஆய்வு நடத்தவில்லை. மரவள்ளிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி டன் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் குறையாமல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

கலெக்டர் மெகராஜ்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி பெரியசாமி:- வெண்ணந்தூர் ஒன்றியம், பெரியகாட்டுக்குட்டை வரும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதனால் மழை காலங்களில் குட்டைக்கு தண்ணீர் வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

கலெக்டர்:- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

இதற்கிடையே கூட்டத்தில் பேசிய கலெக்டர் மெகராஜ், பொது இடத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு அதே இடத்தில் மீண்டும் குப்பைகளை கொட்டுபவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன் என கூறினார். ஒவ்வொரு தனிமனிதரும் சுகாதாரத்தை பாதுகாக்க ஒத்துழைப்பது அவசியம் எனவும் அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்