நத்தக்கரையில், சம்பள உயர்வு கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நத்தக்கரை சுங்கச்சாவடியில் சம்பள உயர்வு கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-11-29 22:15 GMT
தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி உள்ளது. இதில் 79 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால் சுங்கச்சாவடி பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் சம்பள உயர்வு கேட்டு சுங்கச்சாவடி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. நத்தக்கரை சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

சங்க பொருளாளர், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டம் மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியை, பணியாளர்கள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்தாமலேயே வாகனங்களை ஓட்டி சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து வழிகளையும் திறந்து விட்டனர். 3 மணி நேரம் சுங்க கட்டணம் செலுத்தாமலேயே வாகனம் சென்றதால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருகிற 4-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி கூறினர். இதையடுத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து பணிக்கு திரும்பினர்.

மேலும் செய்திகள்