மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உடல் கருகி சாவு
தளி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தளி,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தளி பகுதியில் உள்ள ரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு எரிசினம்பட்டிக்கு சென்றுவிட்டு தளி-ஆனைமலை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அவரது மோட்டார்சைக்கிள் ஜிலோபிநாய்க்கன்பாளையம் அருகே உள்ள வளைவான பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் கே.வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(18) என்பவர் எதிரே மற்றொரு மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தார். இந்தநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது மோட்டார்சைக்கிள்களில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக்கொண்டது. அந்த தீ மளமளவென பரவி அவர்கள் இருவர் உடலிலும் பற்றியது. இதனால் அவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சுரேஷ்குமார் மற்றும் ஹரிஹரன் உடலில் பற்றிய தீயை அணைத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ஹரிஹரன் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததும், சுரேஷ்குமார் விவசாயம் செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் விபத்தில் பலியான இருவரது உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.