கடன் தொல்லையால், பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

பெரியகுளம் அருகே அரளி விதைகளை அரைத்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2019-11-29 22:15 GMT
பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெருமாள்புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி. தையல் தொழிலாளி. அவருைடய மனைவி சுமதி (வயது 28). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும், சபரி என்ற 5 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். குடும்பசெலவுக்காக சுமதி சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடன் தொல்லையாலும், இதய நோயாலும் அவர் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் மகள்களும், மகனும் பள்ளிக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் மனவேதனையில் இருந்த சுமதி, வீட்டில் அரளி விதைகளை அரைத்து குழந்தை சபரிக்கு சங்கு மூலம் வாயில் ஊற்றியுள்ளார். பின்னர் தானும் அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சமயத்தில் அங்கு சுமதியின் தங்கை ரோசி வந்தார். இதையடுத்து ரோசி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையையும், சுமதியையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பச்சிளம் குழந்தை சபரி பரிதாபமாக உயிரிழந்தது. சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்