தமிழகம் உள்பட, பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது - திடுக்கிடும் தகவல்கள்
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை காட்டூரை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 48). இவர் அங்கு எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி நள்ளிரவு கொள்ளையர்கள் புகுந்து ரூ.2½ லட்சத்தை திருடிச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை ரெயில்நிலையம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த 3 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூரு பெல்லாரி கிராமத்தை சோ்ந்த சுரேஷ் ரேக்குலா (47), ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அருணோதயா காலனியை சேர்ந்த தனஞ்செய ரெட்டி (43), செய்யது அகமது (31) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் 3 பேரும் கடைகளின் ஷட்டர் மற்றும் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதும், தமிழகம் உள்பட ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெயிலில் பயணம் செய்து இரவு நேரங்களில் பெரிய கடைகளில் புகுந்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் கோவை ஜே.எம்.-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான 3 பேர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் ருமாறு:-
சுரேஷ் ரேக்குலா மீது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 20 திருட்டு வழக்குகள் உள்ளன.
இவர், திருட்டு வழக்கில் கைதாகி ஆந்திர மாநில சிறையில் இருந்த போது அதே சிறையில் இருந்த தனஞ்செய ரெட்டி, செய்யது அகமது ஆகியோரும் சிறையில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது.
இதனால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர்கள் 3 பேரும் கூட்டு சேர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். கோவையில் எலெக்ட்ரிக்கல் கடையில் திருடிவிட்டு மீண்டும் கைவரிசை காட்ட வந்த போது அவர்கள் 3 பேரும் போலீசாரின் பிடியில் சிக்கினர்.