நாகையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது: நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

நாகையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. மேலும் வேளாங்கண்ணியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. திருமருகல் பகுதியில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-11-29 22:30 GMT
நாகப்பட்டினம், 

நாகையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.மேலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை விடிய,விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

வேளாங்கண்ணி பகுதியில் பலத்த மழை பெய்ததில் செபஸ்தியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குடியிருப்பு பகுதி யில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமப்பட்ட னர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர். அந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மோகனரெங்கன் மற்றும் பணியாளர்களும், பேரிடர் மீட்பு குழுவினர் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நாகையில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடுவையாற்று கரையில் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். கடல் அலைகள் சுமார் 10 அடி உயரம் வரை எழுந்தது. அப்போது ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர்களின் படகு அலையின் சீற்றத்தில் தத்தளித்தன.

திருமருகல் ஒன்றிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்றும் மழை பெய்தது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப் பட்டனர்.

திருமருகல் ஒன்றிய பகுதியில் சம்பா நெற்பயிர்கள் பல்வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருமருகல் கீழகரை யிருப்பு பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழைநீரை விரைவில் வெளியேற்றாவிட்டால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும். எனவே வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல் அருகே சீயாத்தமங்கையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் அங்கன்வாடி முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் மாணவ-மாணவிகள், அங்கன்வாடி குழந்தைகள் பெரும் அவதிப்பட்டனர்.

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளான அத்திப்புலியூர், குருக்கத்தி, கீவளூர், தேவூர், வலிவலம், விடங்கலூர் கோகூர், ஆனைமங்கலம், கடம்பங்குடி,வெங்கிடங்கால், திருகண்ணங்குடி, ஆழியூர், சிக்கல், ஓரத்தூர், ஆவராணி உள்ளிட்ட பகுதிகளில் விடிய,விடிய மழை பெய்தது. இதனால் கீழ்வேளூர். கச்சனம் சாலையில் உள்ள சீதாலெட்சுமியின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று விட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதே போல் நீலப்பாடி தாமரை குளத்தெருவை சேர்ந்த கேசவன் என்பவரின் கூரை வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தது.

மேலும் செய்திகள்