தட்டார்மடம் அருகே, வாகனம் மோதி என்ஜினீயர் பலி
தட்டார்மடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயர் பலியானார்.
தட்டார்மடம்,
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே படுக்கப்பத்து அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டி. விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள். இளைய மகன் நந்தகுமார் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். மேலும் ஆடுகளை வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
நேற்று முன்தினம் மாலையில் நந்தகுமார் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.