கடலூரில் கன மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கடலூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் பேத்தி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்,
கடலூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் நள்ளிரவிலும் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதில் கடலூர் கம்மியம்பேட்டையில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(வயது 50), தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி, மகள்கள், பேரக்குழந்தைகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் நாராயணன் உள்பட அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியபடி கூச்சல் எழுப்பினர். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். ஆனால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் யார்?, எங்கே? இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்களும், திருப்பாதிரிப்புலியூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் நாராயணனின் மனைவி மாலா(50), மகள் மகேஸ்வரி(21), இவரது குழந்தை தனுஸ்ரீ(1) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் நாராயணன், 2-வது மகள் ரஞ்சிதா(16), பேத்தி யுவஸ்ரீ(3), இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் நாராயணனின் தம்பி வேல்முருகன்(40) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, இடிபாடுகளில் சிக்கி பலியான மாலா, மகேஸ்வரி, தனுஸ்ரீ ஆகிய 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதையடுத்து பலியான 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாராயணனின் வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்கி இருந்ததால் சுவர் பொதும்பி விழுந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூரில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.