விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு: உண்ணாவிரதம் இருக்க பொதுமக்கள் முயற்சி

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

Update: 2019-11-29 23:00 GMT
திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிரதான சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு இருந்தன. மேலும் சில கடைகளின் கட்டிடங்கள் பகுதி ஆக்கிரமித்து இருந்தது. 120-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டன.

அதே வேளையில் சாலையோரம் இருந்த இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலய கெபி உள்ளிட்டவை அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. அவற்றை அகற்றும் முடிவை நெடுஞ்சாலைத்துறையினர் சிறிது நாட்கள் தள்ளி வைத்துள்ளனர்.

எடமலைப்பட்டி புதூர் பிரிவு சாலையின் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் பழமையான மங்கள விநாயகர் கோவில் உள்ளது. கோவிலையொட்டி பழமையான அரசமரமும் உள்ளது. இந்த கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் பரவியதால் நேற்று கோவிலை நிர்வகிக்கும் ராஜலிங்கம், பாலசுப்பிரமணியன், அய்யனார் மற்றும் குமணன் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விநாயகர் கோவில் முன்பு திரண்டனர்.

பின்னர் கோவில் முன்பு சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களை மீறி அதிகாரிகள் யாரும் கோவிலை இடிக்க வரமுடியாது. எனவே, மாவட்ட கலெக்டரிடம் அது தொடர்பாக முறையிடவும் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், மங்கள விநாயகர் கோவில் எங்களது மூதாதையர் காலந்தொட்டு 150 ஆண்டுக்கும் மேலாக பராமரித்து வழிபட்டு வருகிறோம். 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்களின் வழிபாட்டுக்கு இந்த கோவில் மட்டுமே உள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக விநாயகர் கோவிலை முழுமையாக அகற்றுவதாக அறிகிறோம். எனவே, மத உணர்வுக்கு மதிப்பளித்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்து எங்களிடமே கோவிலை ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்