நோயால் அவதிப்பட்ட பவானி சங்கமேஸ்வரர் கோவில் வேதநாயகி யானை இறந்தது - பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

நோயால் அவதிப்பட்ட பவானி சங்கமேஸ்வரர் கோவில் வேதநாயகி யானை இறந்தது. அந்த யானைக்கு ஏராளமான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-11-29 22:00 GMT
பவானி, 

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1980-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் 4 வயது உடைய பெண் குட்டி யானையை நன்கொடையாக வழங்கினர். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அந்த யானைக்கு வேதநாயகி என பெயரிடப்பட்டது. கடந்த 39 ஆண்டுகளாக வேதநாயகி யானையை செல்வம் என்பவர் பாகனாக இருந்து பராமரித்து வந்தார்.

கோவிலின் திருவிழாக்கள், சாமி வீதி உலா போன்றவற்றில் யானை கம்பீரமாக வலம் வந்தது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தனது துதிக்கையால் ஆசி வழங்கி வந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் யானைக்கு வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

இந்த நிலையில் வேதநாயகி யானைக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது. இதனால் யானையின் முன்புற கால்களில் உள்ள நகங்களில் புண் உண்டானது. இதன்காரணமாக யானை நடக்க முடியாமல் அவதிப்பட்டது. இதற்கிடையே கோவை மாவட்டம் மேட்டு்ப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடந்த யானைகள் நல முகாமில் வேதநாயகி யானை பங்கேற்றது. அப்போது யானைகள் மறுவாழ்வு சிறப்பு டாக்டர் அசோகன் தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் யானையின் நோய் குணமடையவில்லை. நோயின் தீவிரத்தை உணர்ந்து சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் வேதநாயகி யானைக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது.

நோய் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யானைகள் நல முகாமில் வேதநாயகி யானை பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி யானைக்கு கீரை, பருப்பு, பேரீச்சம்பழம், கரும்பு தோகை ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் யானையின் உடல் பகுதியில் இரண்டு புறங்களிலும் புண் ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக யானை உணவு உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டது. இதன்காரணமாக யானை சோர்வுடன் காணப்பட்டது.

இதனிடையே வேதநாயகி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘மாவட்ட குழுவில் இடம் பெற்று உள்ள வன உயிரின காப்பாளர், கால்நடை டாக்டர்கள் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் வேதநாயகி யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட விலங்குகள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து யானையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென யானை பிளிறியது. இதைத்தொடர்ந்து யானைக்கு பாகன் தண்ணீர் கொடுத்தார். பின்னர் யானை மயங்கியது. உடனே யானையை எழுப்பி நிற்க வைக்கும் முயற்சியில் பாகன் ஈடுபட்டார். ஆனால் யானை எழுந்திருக்காமல் தலையை மட்டும் ஆட்டியது. பின்னர் 5.10 மணி அளவில் யானை இறந்தது.

தற்போது கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளதால் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது. யானை இறந்த தகவல் தெரிந்ததும் சங்கமேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டது.

வேதநாயகி யானை இறந்த ெசய்தி பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இதன்காரணமாக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணீர் மல்க யானையின் மீது மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மதியம் 12 மணி அளவில் அடக்கம் செய்வதற்காக வேதநாயகி யானையின் உடல் கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலம் கோவிலில் இருந்து பூக்கடை வீதி, செல்லியாண்டி அம்மன் கோவில் வீதி வழியாக கோவில் அருகே உள்ள யாத்திரிகர் தங்கும் விடுதியின் பின்புற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கோவில் குருக்கள் வேத மந்திரங்கள் ஓத யானையின் உடல் ஆகமவிதிப்படி குழிக்குள் புதைக்கும் இறுதிச்சடங்கு நடந்தது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் குழிக்குள் இறக்கப்பட்டது. பின்னர் அங்கு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது

மேலும் செய்திகள்