கோவையில், தடையை மீறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்; 800 பேர் கைது - போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 800 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-11-28 22:15 GMT
கோவை,

கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் தி.மு.க.வினரை கைது செய்து அழைத்து செல்வதற்காக தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்றுக்காலை 9 மணி முதல் போலீஸ் வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனே சாலையில் உட்கார்ந்த தி.மு.க.வினரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, வக்கீல் பி.ஆர்.அருள்மொழி, மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, குப்புசாமி, உமா மகேஸ்வரி, பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கார்த்திக் செல்வராஜ், நா.முருகவேல், வக்கீல் மகுடபதி, அஞ்சுகம் பழனியப்பன், ராஜராஜேஸ்வரி, முத்துசாமி, கோட்டை அப்பாஸ், முரா.செல்வராஜ், கணபதி சம்பத்குமார் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு போலீசார் அழைத்துச்சென்று தங்க வைத்தனர்.

முன்னதாக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டுகளுக்கு, 3,150 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் விரட்டியடிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு இங்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கோவை மாநகராட்சி முழுவதும் குண்டும் குழியுமான சாலைகள் உள்ளது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதாரமற்ற மாநகராட்சியாக திகழ்கின்றது. 100 சதவீத வரி உயர்வு தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். ஆனால் மக்கள் பிரச்சினைக்கான இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்