கயத்தாறு அருகே, ஓடை பாலத்தில் மினி டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

கயத்தாறு அருகே ஓடை பாலத்தில் மினி டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2019-11-28 23:00 GMT
கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கிரு‌‌ஷ்ணகுமார் (வயது 27). இவர் மினி டேங்கர் லாரியில் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று காலையில் கயத்தாறு அருகே அய்யனாரூத்து கிராமத்தில் மினி டேங்கர் லாரியில் சென்று தண்ணீரை விற்பனை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து கயத்தாறுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் பகுதியில் சென்றபோது, அங்குள்ள ஓடை பாலத்தின் இடதுபுற தடுப்பு சுவரில் மினி டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் மினி டேங்கர் லாரி, ஓடை பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மினி டேங்கர் லாரியில் இருந்து வெளியே ஓடையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கிரு‌‌ஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, விபத்தில் பலியான கிரு‌‌ஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்