கூடலூர் அருகே, விஷ பாம்புகளின் புகலிடமான அங்கன்வாடி மைய கட்டிடம் - குழந்தைகள், பெற்றோர் பீதி
கூடலூர் அருகே விஷ பாம்புகளின் புகலிடமாக அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெற்றோர் பீதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளது. குறிப்பாக வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. மேலும் கூடலூர் பகுதியில் ராஜநாகம் உள்பட கொடிய விஷமுள்ள பாம்புகள் அதிகம் உள்ளன. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கூடலூரில் பாம்புகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மழை குறைந்து மிதமான வெயில் மற்றும் குளிர் காணப்படுகிறது. இதனால் பாம்புகள் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. கூடலூர் அருகே 2-ம் மைல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இது தவிர பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இங்கு தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் துளைகள் விழுந்து விஷ பாம்புகள் வசிக்க ஏற்றதாக உள்ளது.
இதை உணர்த்தும் வகையில் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் துளையில் பாம்பு தோல் உரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதான கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும், பள்ளி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 8½ மணிக்கு வழக்கம்போல் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மாணவ-மாணவிகள் வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்களை படிக்க தொடங்கினர். அப்போது ஆசிரியர்கள் அமரும் அறைக்குள் சென்றபோது, அங்கு விஷ பாம்பு ஒன்று படுத்து கிடந்தது. இதை கண்ட ஆசிரியைகள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் சிலர், அங்கு ஓடி வந்து பாம்பை பிடித்து அடர்ந்த வனத்துக்குள் கொண்டு விட்டனர். இருப்பினும் மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் பீதியில் இருந்து விடுபடாமல் உள்ளனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது:-
பழுதடைந்த கட்டிடங்களில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி உள்ளது. அங்கு குழந்தைகள் தரையில் அமர்ந்து பாடம் படித்து, விளையாடி வருகின்றனர். விஷ பாம்புகளின் புகலிடமாக கட்டிடங்கள் உள்ளதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்ற பீதி நிலவுகிறது. எனவே குழந்தைகள், மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். இல்லை எனில் பாம்புகள் வராமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் செயல்படும் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர், பாம்பு கடித்து பலியானார். இதுபோன்ற சம்பவம் கூடலூரிலும் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.