ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு வணிகம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு

ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்படும் சில்லரை வணிகர்களை காக்க ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு வணிகம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

Update: 2019-11-28 22:45 GMT
ஆம்பூர், 

வேலூர் மாவட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் சி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆம்பூர் செயலாளர் முனீர்அஹமத், பொருளாளர் அன்பு, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், ஜவுளி சங்க தலைவர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஞானவேலு வரவேற்றார்.

கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

மேலும் ஆன்லைன் வர்த்தகத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ள சில்லரை வணிகர்களை காக்க ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு வணிகம் செய்யும் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடையை மதித்து வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஆனால் சிறு வணிகர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்படாத மறுசுழற்சி செய்யக்கூடிய பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஆம்பூர் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆம்பூரில் சார்-ஆட்சியர் அலுவலகம் அமைத்திட வேண்டும். ஆம்பூர் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டமாக பிரிக்கப்பட்டதால் 3 மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்