வெண்ணந்தூர் பகுதியில் ரூ.15¼ கோடியில் 327 வளர்ச்சி பணிகள் - அமைச்சர் சரோஜா தகவல்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.15¼ கோடி மதிப்பீட்டில் மொத்தம் 327 வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.;
வெண்ணந்தூர்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், குட்டலாடம்பட்டி, தொட்டியவலசு, மூலக்காடு, அலவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, மின்னக்கல், எண்-3 கொமாரபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் சரோஜா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது அவர், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.15.26 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 327 வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
பின்னர் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.2.50 கோடியில் குட்டலாடம்பட்டி முதல் பல்லவாநாயக்கன்பட்டி வரை 4 கி.மீ. நீளத்திற்கு தார்சாலை அமைக்கும் பணி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்தில் தொட்டியவலசு முதல் குட்டலாடம்பட்டி வரை 3.4 கி.மீ. நீளத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலியை அமைச்சர் வழங்கினார். குட்டலாடம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
அக்கரைப்பட்டி பகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றபோது பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளின் விருப்பத்திற்கிணங்க அமைச்சர் மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியளார் பாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் தாமோதரன், காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டறவு விற்பனை சங்க தலைவர் பொன்னுசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட சமூகநல அலுவலர் கோமதி, ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன், வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா, முன்னாள் தலைவர் செல்வம், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், செந்தில்வேல் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.