சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார்

மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார். டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு கவர்னர் ‘கெடு’ விதித்து உள்ளார்.;

Update: 2019-11-28 00:22 GMT
மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டது.

அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந் தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.

அவசரகதியில் பதவி ஏற்ற பாரதீய ஜனதா அரசின் ஆயுள் வெறும் 4 நாட்களில் முடிந்து போனது. இதனால் அந்த கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது.

நேற்று முன்தினம் மாலை மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் மூன்று கட்சி தலைவர்களும் கவர்னர் பகத்சிங் கோ‌‌ஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அப்போது தங்களுக்கு 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி அவர்கள் கடிதம் கொடுத்தனர்.

அதை ஏற்று புதிய அரசு அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுத்த கவர்னர், வருகிற டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு ‘கெடு’ விதித்தார்.

கவர்னர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து கூட்டணி அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளில் 3 கட்சிகளின் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

உத்தவ் தாக்கரே நேற்று காலை தனது மனைவி ரா‌‌ஷ்மியுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோ‌‌ஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது தன்னை ஆட்சி அமைக்க அழைத்ததற்காக கவர்னருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6.40 மணிக்கு, சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இங்குதான் பால்தாக்கரே ஒவ்வொரு ஆண்டும் தசரா பொதுக்கூட்டத்தை நடத்தி தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றி வந்தார். இங்கு நடைபெறும் விழாவில் புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பகத்சிங் கோ‌‌ஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

உத்தவ் தாக்கரேவுடன் 3 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.

முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் உத்தவ் தாக்கரே தற்போது மராட்டிய சட்டசபை உறுப்பினராகவோ அல்லது மேல்-சபை உறுப்பினராகவோ இல்லை. எனவே அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ள வேண்டி அதற்கான அழைப்பிதழை மும்பையில் தங்கி இருக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே வழங்கினார்.

இதேபோல் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலே‌‌ஷ் யாதவ் உள்பட பல்வேறு மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சிவாஜிபார்க் மைதானத்தில் பதவி ஏற்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பதவி ஏற்பு விழாவுக்கு ஒரு மேடை, தலைவர்கள் அமர ஒரு மேடை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அமர ஒரு மேடை என 3 மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சிவாஜிபார்க் பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 

மேலும் செய்திகள்