சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பட்னாவிஸ், ஆதித்ய தாக்கரே, தமிழ்ச்செல்வன் உள்பட 285 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

மராட்டிய சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ், ஆதித்ய தாக்கரே, கேப்டன் தமிழ்ச்செல்வன் உள்பட 285 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். ஒரு மாதத்துக்கு பிறகு நடந்த பதவி ஏற்பால் எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம் அடைந்தனர்.

Update: 2019-11-27 23:52 GMT
மும்பை, 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 24-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி அமையாமல் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக ஒரு மாதத்துக்கு மேலாக எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காமல் இருந்தனர். கடந்த 23-ந் தேதி அதிரடியாக பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த வழக்கில் நேற்றுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், பதவி ஏற்ற 4 நாட்களில் பாரதீய ஜனதா அரசு கவிழ்ந்தது. இதனால் சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் பலப்பரீட்சை நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

இதற்கிடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் மற்றொரு அம்சமாக தேவேந்திர பட்னாவிஸ் பலப்பரீட்சையை நடத்தும் முன்பு, இடைக்கால சபாநாயகரை நியமித்து எம்.எல்.ஏ.க்களை பதவி ஏற்க செய்ய வேண்டும் என்பது இடம் பெற்று இருந்தது. அதன் அடிப்படையில் பாரதீய ஜனதா மூத்த எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கரை நேற்றுமுன்தினம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தற்காலிக சபாநாயகராக நியமித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டவும் கவர்னர் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை மராட்டிய சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடியது. தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் கோலம்கர் சபையை நடத்தி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாற்று தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட பபன்ராவ் பச்புதே, விஜயகுமார் காவித், ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ஆகியோர் முதலில் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். அவர்களை தொடர்ந்து காபந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார்.

பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவளித்ததால் துணை முதல்-மந்திரி பதவி ஏற்று, பின்னர் ராஜினாமா செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், அக்கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால், காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோரும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா சார்பில் 2-வது முறையாக மராட்டிய சட்டசபைக்கு தேர்வான கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வும் பதவி ஏற்றுக் கொண்டார். சட்டசபைக்கு புதிதாக தேர்வான சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, சரத்பவார் பேரன் ரோகித் பவார், காங்கிரசின் தீரஜ் தேஷ்முக் ஆகியோரும் பதவி ஏற்றனர். இவர்களுடன் சேர்த்து சட்டசபையில் மொத்தம் 283 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டசபை சிறப்பு கூட்டம் முடிந்த பின்னர் சுயேச்சை எம்.எல்.ஏ. மகேஷ் பால்டி, எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில் ஆகியோர் தாமதமாக வந்தனர். அவர்கள் இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்கரின் அறையில் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். மொத்தம் 285 எம்.எல்.ஏ.க்களுக்கு காளிதாஸ் கோலம்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தற்காலிக சபாநாயகர் எம்.எல்.ஏ. பதவி ஏற்றுக்கொண்டதாக கருதப்படும் நிலையில், பாரதீய ஜனதாவின் சுதீர் முங்கண்டிவார், சுவாபிமானி கட்சியின் தேவேந்திர புயார் ஆகிய 2 பேர் மட்டும் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை.

முன்னதாக மும்பை ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே பதவி ஏற்கும்போது, அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் ஆரவாரம் செய்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் உற்சாசத்துடன் வந்து பதவி ஏற்றனர். சமீப நாட்களாக நடந்த அரசியல் குழப்பத்தில் எதிரும், புதிருமாக செயல்பட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கைகோர்த்து வியப்பை ஏற்படுத்தினர்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது சட்டசபை வளாகத்திற்கு சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. வந்திருந்தார். அப்போது, அங்கு வந்த அஜித்பவாரை அவரது ஒன்றுவிட்ட சகோதரியான சுப்ரியா சுலே கட்டி தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதேபோல ஆதித்ய தாக்கரேயையும், சுப்ரியா சுலே கட்டி தழுவி வாழ்த்தினார்.

இது அங்கு நின்றவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்