அஜித்பவாருடன் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைத்திருக்க கூடாது - ஏக்நாத் கட்சே பேட்டி

ஊழல் வழக்குகளில் சிக்கிய அஜித்பவாரு டன் சேர்ந்து பாரதீய ஜனதா ஆட்சி அமைத்து இருக்க கூடாது என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கூறினார்.;

Update: 2019-11-27 23:28 GMT
மும்பை, 

பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக பதவி வகித்த தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்து அதிகாரம் மிக்கவராக விளங்கிய பாரதீய ஜனதா தலைவர் ஏக்நாத் கட்சே.

ஆனால் முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னையும் சேர்த்து சந்திரசேகர் பவன்குலே, வினோத் தாவ்டே மற்றும் இன்னும் சில முக்கிய பாரதீய ஜனதா தலைவர்கள் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இருந்து வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்த முடிவுக்கு கட்சி பெரும் விலை கொடுத்துவிட்டது. நாங்கள் சிறந்த முறையில் எங்கள் பங்களிப்பை கொடுக்க வாய்ப்பு கொடுத்திருந்தால், பாரதீய ஜனதா குறைந்தது 20 முதல் 25 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கும்.

இந்த பிரச்சினை குறித்து மூத்த தலைவர்களிடம் நாங்கள் ஏற்கனவே பேசி உள்ளோம்.

பாரதீய ஜனதா முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரின் மீதான ஊழல் புகாரில் ஆதாரம் இருப்பதாக கூறியது. அவருக்கு எதிராக பிரசாரம் செய்தது. இந்த நிலையில் அவருடனேயே கூட்டணி வைத்து ஆட்சி அமைத்து இருக்க கூடாது. இது அவர் மீதான ஆதாரங்களை நாம் குப்பை தொட்டியில் போட்டது ஆகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்