வாக்கி- டாக்கியை பிடித்து இழுத்து போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

வாக்கி-டாக்கியை பிடித்து இழுத்து போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update: 2019-11-27 22:00 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பிரதாப் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வஞ்சியாபுரம் பகுதியில் அவர் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் மேட்டில் 3 பேர் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீஸ்காரர் பிரதாப், பொது இடத்தில் அமர்ந்து மது அருந்த கூடாது. அங்கிருந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மது அருந்தி கொண்டிருந்த 3 பேரும் இங்கிருந்து செல்ல முடியாது என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் பிரதாப்பின் சீருடை மற்றும் வாக்கி-டாக்கியை பிடித்து இழுத்ததாக தெரிகிறது. மேலும் அவரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் பிரதாப் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சூளேஸ்வரன்பட்டி கட்டபொம்மன் நகரை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் நஜிமூதின் (வயது50), அதே பகுதியில் விவேகானந்த வீதியை சேர்ந்த ஜபருல்லா (49), கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த ஜயப்பன் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பொது இடத்தில் தகாத வார்த்தையால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்து, பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸ்காரரை மிரட்டிய வழக்கில் 3 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்