சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 8 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-11-27 23:00 GMT
சேலம்,

தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பில் பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும். பெண்கள் உரிமைக்காக காந்தியடிகள் கண்ட கனவை நினைவாக்க வேண்டும். பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்கொடுமைக்கான சட்டங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க துறை ரீதியாக உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

இதற்காக சங்க மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி மதியழகன் தலைமையில், உதவி தலைவர் கவிதா செந்தில், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ராஜ் உள்பட பலர் அங்கு கூடினர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

11 பேர் கைது

அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையொட்டி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக கூறி 8 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்