அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த விவசாயிக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர் பணியிட மாற்றம்

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த விவசாயிக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2019-11-27 22:30 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தீபன் (வயது 38). விவசாயியான இவர், கடந்த 25-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கீரமங்கலத்திற்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு வாகனம் வருவதை பார்த்து திடீரென பிரேக் பிடித்ததில், நிலைதடுமாறி சாலையிலேயே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள், செவிலியர்கள், துணை செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், துப்புரவு பணியாளர் ஒருவர் கார்த்தீபனுக்கு தையல் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இது ெதாடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியானது.

பணியிட மாற்றம்

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சந்திரசேகரன் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை முடிவில், கார்த்தீபனுக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர் கோவிந்தராஜன், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில், பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, முதற்கட்டமாக துப்புரவு பணியாளர் கோவிந்தராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த நேரத்தில் பணியில் இருந்த டாக்டர் மற்றும் பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கார்த்தீபனின் உறவினர்கள் கூறுகையில், பணி நேரத்தில் டாக்டர்கள், செவிலியர்கள். உதவியாளர்கள் தான் தையல் போட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளரை தையல்போட சொல்லிவிட்டு அலட்சியமாக இருந்த டாக்டர் மற்றும் அலுவலர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்