தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி
சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியதில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கீழ்கட்டளை அம்பாள் நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
கோவிலம்பாக்கம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான சுரேசுக்கு பவித்ரா என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.