அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து 40 பவுன் நகை கொள்ளை - 2 பேர் கைது

முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து 40 பவுன் நகையை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-27 22:30 GMT
பூந்தமல்லி, 

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தினகரன். இவருடைய மனைவி வசந்தகுமாரி (வயது 70). இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அமெரிக்காவில் வசித்து வரும் தங்கள் மகள் திவ்யாவை பார்க்க சென்றுவிட்டனர்.

சின்ன நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த வள்ளி (40) என்ற பெண்ணை மாதம் ஒருமுறை வீட்டை திறந்து சுத்தம் செய்ய வேலைக்கு அமர்த்திவிட்டு சென்று இருந்தனர். அதன்படி வள்ளி, தினகரன் வீட்டை திறந்து சுத்தம் செய்ய உள்ளே சென்றார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நொளம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த அருண் (28), ராஜ்குமார் (23) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள், தினகரன் வீடு பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அந்த வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்