குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த அயத்தூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அயத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் கஞ்சா விற்பது, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கூலிப்படைகளை வைத்து வாலிபர்களை தீயவழியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் பெண்களிடம் நகை பறித்தல், கோவில் கோபுர கலசங்களை திருடுதல், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கேலி கிண்டல் செய்தல், போதை பொருட்களை பள்ளி அருகில் விற்பனை செய்வது என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இளைஞர்களை அவர்கள் கொலை செய்யும் நோக்கில் மிரட்டி வருகின்றனர்.
அந்த கும்பல் அயத்தூரை சேர்ந்த விக்ரம் என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே அயத்தூர் பகுதியில் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் அயத்தூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் வ.பாலா என்கிற பாலயோகியுடன் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.