திருச்சியில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகனிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திருச்சியில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகனிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

Update: 2019-11-27 23:15 GMT
திருச்சி,

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி சுவரில் துளையிட்டு ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள ரூ.28½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையில் திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் உள்பட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. சுரேஷ் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். சுரேசை கோர்ட்டில் அனுமதி பெற்று திருச்சி அழைத்து வந்த போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தநிலையில் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளியான முருகனை காவலில் எடுக்க திருச்சி கோட்ைட குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருக்கு சென்று முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் பெங்களூருவில் முருகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அடுத்தடுத்து பெங்களூரு போலீசாரே முருகனை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் இதுவரை 25½ கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன.

மீதமுள்ள 3 கிலோ நகைகளை மீட்க முருகனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முடியும் என போலீசார் கருதினர். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட தொடர் முயற்சியை அடுத்து, கொள்ளை நடந்து 55 நாட்களுக்கு பிறகு பெங்களூருவில் இருந்து முருகனை போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்து மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 11.45 மணி அளவில் முருகனை பலத்த பாதுகாப்புடன் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையிலான போலீசார் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) திரிவேணி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது முருகனிடம் 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வேண்டும் என்று ேகாரிக்கை வைத்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு 7 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து முருகன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், “முருகனுக்கு நோய் பாதிப்பு உள்ளதால் தினமும் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும். வருகிற 30 மற்றும் டிசம்பர் 3-ந்ேததி முருகனை ஒரு மணிநேரம் வக்கீல்கள் சந்தித்து பேசலாம். போலீஸ் காவல் முடிந்து வருகிற 4-ந்தேதி அவரை மீண்டும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்