செடி-கொடிகளை அகற்றும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்; பொதுமக்கள் அதிருப்தி

கோலார் தங்கவயலில் அமைந்துள்ள தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் நடந்த செடி-கொடிகளை அகற்றும் பணியை தங்கச்சுரங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Update: 2019-11-27 22:45 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் அமைந்துள்ள தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் நேற்று தூய்மை பணி நடந்தது. இதையொட்டி பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு அப்பகுதியில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கவுன்சிலர் வள்ளல் முனிசாமி செய்திருந்தார். இந்த நிலையில் இப்பகுதி தங்கச்சுரங்க நிர்வாகத்துக்கு(பி.ஜி.எம்.எல்.) உட்பட்டது என்றும், அதனால் இங்கு ஏதேனும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் கூறி தங்கச்சுரங்க அதிகாரிகள், செடி-கொடிகளை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் இதுபற்றி கவுன்சிலர் வள்ளல் முனிசாமி மற்றும் நகரசபை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு செடி-கொடிகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி கூறியதாவது:-

தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதி, தங்கச்சுரங்க நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. ஆனால் கடந்த 2001-ம் ஆண்டு தங்கச்சுரங்கம் மூடப்பட்டதும் தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் இப்பகுதி செடி-கொடிகள் வளர்ந்து புதர்கள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் பாம்புகள் இப்பகுதியில் உலா வருகின்றன. தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் செடி-கொடிகளை அகற்றும் பணி நடந்தது. அதையும் தங்கச்சுரங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். இது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்