கூடலூர் அருகே, சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்

கூடலூர் அருகே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-27 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே வெட்டுக்காடு, இந்திராநகர், அம்மாபுரம், நாயக்கர்தொழு, பளியன்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் மருத்துவமனைக்கு செல்ல காஞ்சிமரத்துறை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் விளைந்த பொருட்களை டிராக்டர்கள், மினி லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் விவசாயிகள் அந்த சாலை வழியாகவே கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்குள்ள கூடலூர்-காஞ்சிமரத்துறை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக அவசர காலங்களில் குறிப்பாக கர்ப்பிணிகள், நோயாளிகள், குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ், ஆட்டோக்களை அழைத்தால் சாலை சேதத்தை காரணம் காட்டி வர மறுக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், கூடலூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும், சாலை மறியல், முற்றுகை போராட்டமும் நடத்தினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து வெட்டுக்காடு, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சேதமடைந்து காணப்படும் கூடலூர்-காஞ்சிமரத்துறை சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ரே‌‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்