பணமதிப்பிழப்பு தெரியாமல் 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகள்

பணமதிப்பிழப்பு தெரியாமல் 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகள் அதை மருத்துவ செலவுக்கு கொடுத்த போது செல்லாது என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-

Update: 2019-11-27 23:00 GMT
மங்கலம், 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள்(வயது 75). தங்கம்மாள் (72). இருவரும் அக்காள்-தங்கை ஆவார்கள். இருவரது கணவர்களும் இறந்து விட்டனர். இதில் ரங்கம்மாளுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். தங்கம்மாளுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடந்து வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். இதனால் இவர்கள் பூமலூரில் வசிக்கும் தங்களுடைய மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரங்கம்மாள் பார்வை கோளாறு காரணமாகவும், தங்கம்மாள் சளி தொல்லையாலும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அவர்கள் இருவரையும் மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இருவருக்கும் மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதற்கு பணம் அதிகம் செலவாகும் என்றும் கூறினார்கள். இதை மகன்கள் தங்கள் தாயாரிடம் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் தங்கள் மகன்களுடன் வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். மகன்கள் தங்கள் தாயாருக்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்படுகிறது என்று அக்கம், பக்கத்தினரிடம் கடன் வாங்க அலைந்து திரிந்தனர். இதனால் மூதாட்டிகள் இருவரும் கணவர், மகன்களுக்கு தெரியாமல் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து தங்கள் மகன்களிடம் கொடுத்தனர்.

ரங்கம்மாள் ரூ.22 ஆயிரமும், தங்கம்மாள் ரூ.24 ஆயிரமும் கொடுத்தனர். அவை அனைத்தும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பழைய ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது? என குழப்பம் அடைந்தனர்.

இது குறித்து ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்தது தெரியாது. போதிய படிப்பறிவு இல்லை. ஆதலால் தான் அரசு செல்லாது என்று அறிவித்தது கூட தெரியாமல் இத்தனை ஆண்டுகளாக அந்த பணத்தை நாங்கள் பாதுகாத்து வந்தோம். பல ஆண்டுகளாக கணவர் கொடுக்கும் பணத்தை மிச்சப்படுத்தி சிறுக, சிறுக சேர்த்து அதை ரூ.500, ரூ.1000 ஆக மாற்றி சேமித்து வைத்து இருந்தோம்.

இப்போது மருத்துவ செலவுக்கு மகன்கள் கஷ்டப்பட கூடாது என்று நினைத்து நாங்கள் சேமித்து வைத்த பணத்தை எடுத்து கொடுத்தோம். அது செல்லாத ரூபாய் நோட்டுகள் என்று மகன்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உள்ளோம். பல ஆண்டுகளாக சிறுக, சிறுக சேமித்து வைத்த பணம். இப்போது செல்லாது என்று தெரிந்து அந்த பணத்தை என்ன செய்வது என குழப்பத்தில் உள்ளோம்.

நாங்கள் சேமித்து வைத்த பணத்தை எனது பேரன், பேத்திகளுக்கு கொடுத்து அவர்களுக்கு விருப்பப்பட்டதை வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம். அது நடக்காமல் போய் விட்டதே என்று வேதனையில் உள்ளோம்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாங்கள் சேர்த்து வைத்து உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்