பிரச்சினைகளை தெரிவிக்க பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் - துணை போலீஸ் சூப்பிரண்டு
அனைத்து தரப்பு மக்களும் பிரச்சினைகளை தெரிவிக்க என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என புதிதாக பொறுப்பேற்றுள்ள கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சாந்தி பெரம்பலூருக்கும், தஞ்சாவூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் கடலூருக்கும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் நேற்று கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், உட்கோட்ட தனிப்படை போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, கடலூர் உட்கோட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் பொது அமைதியும், குற்ற தடுப்பு நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பு மக்களும் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை தெரிவிக்கலாம். பொதுமக்களின் பிரச்சினைகளை பரிசீலனை செய்து உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.