டிக்டாக் வீடியோவில் மூழ்கிக்கிடந்ததை கணவர் கண்டித்ததால் - விஷம் குடித்து பெண் தற்கொலை
பல்லடத்தில் டிக்டாக் வீடியோவில் மூழ்கி கிடந்ததை கணவர் கண்டித்ததால் மனம் உடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம்,
பல்லடம் சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 30). இவர்களுக்கு திருணமாகி 6½ ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்போனில் வாட்ஸ்-அப், டிக்டாக் போன்ற செயலிகளில் அய்யம்மாள் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் சமையல் செய்யாமலும், குழந்தைகளை சரிவர கவனிக்காமலும் டிக்டாக் வீடியோவில் அய்யம்மாள் மூழ்கி கிடந்துள்ளார். இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி கணவருடன் சண்டைபோட்டுக்கொண்டு அய்யம்மாள் மதுரையில் உள்ள அவருடைய தாய் வீ்ட்டிற்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன் -மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அய்யம்மாள் கோபித்துக்கொண்டு மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து 25-ந் தேதி பல்லடத்திற்கு வந்துள்ளார்.
வீ்ட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் எதற்காக வாந்தி எடுக்கிறாய்? என்று அய்யம்மாளிடம் கேட்டுள்ளார். அப்போது குடும்பத்தில் அடிக்கடி சண்டைஏற்படுவதால், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
உடனே ராஜேந்திரன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்..அங்கு சிகிச்சை பலனின்றி அய்யம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.