தூத்துக்குடியில், சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 316 பேர் கைது

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 316 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-11-26 22:15 GMT
தூத்துக்குடி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 37 ஆண்டுகளாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு மையங்களை இணைப்பது மற்றும் மூடுவதை கைவிட வேண்டும். சமையல் எரிவாயுவை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். செயலாளர் பொன்சேகர் கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சேவியர், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பவுல் ஆபிரகாம், கணேசன், மாவட்ட பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர் சங்கம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகா‌‌ஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 280 பெண்கள், 36 ஆண்கள் என மொத்தம் 316 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்