தாலுகா அலுவலகங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை - இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-11-26 22:00 GMT
கோவில்பட்டி, 

சொந்த வீடு இல்லாதவர்களுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தகுதி உள்ள அனைத்து முதியவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

அதன்படி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் முற்றுகையிட்டனர். ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, கிரு‌‌ஷ்ணவேணி, விஜயலட்சுமி, நகர குழு உறுப்பினர்கள் சக்திவேல் முருகன், சர்க்கரையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தலைமையிடத்து துணை தாசில்தார் நாகராஜிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையில் முற்றுகையிட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், ராஜப்பா, வைரமாலா, ராமர், முருகேசன், முத்தழகு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா செயலாளர் புவிராஜ் தலைமையில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், தேர்தல் துணை தாசில்தார் ஆறுமுகசாமியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர்கள் நம்பிராஜன் (ஸ்ரீவைகுண்டம்), ராமச்சந்திரன் (கருங்குளம்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், துணை தாசில்தார் சசிகுமாரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்துகுமார் உள்ளிட்டவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ஞானராஜிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாத்துரை உள்ளிட்டவர்கள் முற்றுகையிட்டு, கோரிக்கை மனு வழங்கினர்.

இதேபோன்று ஏரல், கயத்தாறு தாலுகா அலுவலகங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு, மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்