உத்தவ் தாக்கரேயின் வாழ்க்கை குறிப்பு : பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர்
மராட்டிய புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 1960-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி பிறந்தவர்.
சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேயின் மகனாக இருந்த போதும், அவர் நேரடியாக அரசியலில் குதித்துவிடவில்லை. ஆரம்ப காலங்களில் மராத்தி பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உத்தவ் தாக்கரேவுக்கு புகைப்பட கலையில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனாலும் சிவசேனாவிற்காக தேர்தல் பிரசாரங்களில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளும் தன்மை கொண்ட உத்தவ் தாக்கரேவுக்கு அரசியல் ஒத்துவராது என்று கருதப்பட்டது.
மேலும் சிவசேனாவில் பால்தாக்கரேயின் சகோதரர் மகன் ராஜ் தாக்கரேவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. எனவே அவர் தான் பால் தாக்கரேயின் அடுத்த அரசியல் வாரிசாக இருப்பார் என எல்லோராலும் கருதப்பட்டது.
இந்தநிலையில் 2002-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றது. அதன்பிறகு தான் 2003-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே சிவசேனாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தான் சிவசேனா உத்தவ் தாக்கரேயின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்தது.
பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த போதும், கட்சியை திறம்பட நடத்தி வந்தார். குறிப்பாக ராஜ் தாக்கரே கட்சியை விட்டு சென்ற போது சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. எனினும் உத்தவ் தாக்கரேயின் அணுகுமுறையால் சிவசேனா அதில் இருந்து மீண்டு வந்தது. பால்தாக்கரே மறைவை தொடர்ந்து சிவசேனா தலைவர் பொறுப்பை உத்தவ் தாக்கரே ஏற்றார்.
2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் பா.ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்த போதும், அதை மென்மையாகவே கையாண்டார். பின்னர் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க, அந்த அரசில் கூட்டணி சேர்ந்து கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார்.
எனினும் காலத்தின் கட்டாயத்தால் பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற அதிரடி முடிவு எடுத்தார். இதன் மூலம் உத்தவ் தாக்கரே மராட்டியத்தின் முதல்-மந்திரி ஆகிறார். 1995-ம் ஆண்டுக்கு பிறகு மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைகிறது.
சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே எந்த அரசு பதவியையும் வகிக்காமல் வாழ்ந்து மறைந்தார். அவரது மகனான உத்தவ் தாக்கரேயும் தேர்தலில் போட்டியிடாமலும், அரசு பதவி வகிக்காமலும் அரசியல் செய்து வந்த நிலையில், அவர் மாநிலத்தின் உயரிய முதல்-மந்திரி பதவியை ஏற்க உள்ளார். 59 வயதான உத்தவ் தாக்கரே தற்போது எம்.எல்.ஏ. ஆக இல்லை.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ராஷ்மி தாக்கரே என்ற மனைவியும், ஆதித்ய தாக்கரே, தேஜாஸ் தாக்கரே என்ற மகன்களும் உள்ளனா். இதில் ஆதித்ய தாக்கரே தீவிர அரசியலில் இறங்கி தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர் தான் தாக்கரே குடும்பத்தின் அடுத்த அரசியல் வாரிசாக உள்ளார். தேஜாஸ் இயற்கை மரங்கள் தொடர்பான ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
மராட்டியத்தில் இழந்த அந்தஸ்தை மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் கொள்கைகளில் நேர் எதிர்கொண்ட கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு உத்தவ் தாக்கரே கூட்டணி அரசை அமைக்க உள்ளார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தந்தால் மட்டுமே அது உத்தவ் தாக்கரேவின் முடிவுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும். அந்த வெற்றி அவருக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.