மெட்ரோ-3 திட்டத்துக்காக சுரங்க பாதை அமைக்கும் பணி 70 சதவீதம் முடிந்தது

மும்பை மெட்ரோ-3 திட்டத்திற்கான சுரங்க பாதை அமைக்கும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது என மும்பை மெட்ரோ ரெயில் கழகம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-11-26 23:15 GMT
மும்பை, 

கொலபா- பாந்திரா- சீப்ஸ் இடையேயான மும்பை மெட்ரோ-3 திட்டப்பணிகள் நடந்து வருகிறது. 55 கி.மீ. தூரம் அமைய உள்ள இந்த திட்டப்பணியில் மெட்ரோ ரெயில்கள் முழுக்க முழுக்க சுரங்க பாதையில் இயக்கப்பட உள்ளன. இதில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி 70 சதவீதம்(38.25 கி.மீ. தூரம்) முடிந்துவிட்டதாக மும்பை மெட்ரோ ரெயில் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பணியை சுமார் 16 ஆயிரம் தொழிலாளர்கள், ஊழியர்கள் இரவு, பகலாக கடுமையாக உழைத்து 2 ஆண்டுகளில் முடித்து உள்ளதாக மும்பை மெட்ரோ கழக நிர்வாக இயக்குனர் அஸ்வினி பிடே கூறினார்.

இதில், பகுதி வாரியாக கப்பரடே- உத்தத்மா சவுக் இடையே 56 சதவீதம், சி.எஸ்.எம்.டி.- கிரான்ட் ரோடு இடையே 86 சதவீதம், மும்பை சென்டரல்- ஒர்லி இடையே 38 சதவீதம், சித்திவிநாயக்- சிட்லா தேவி கோவில் இடையே 74 சதவீதம், தாராவி- சாந்தாகுருஸ் இடையே 74 சதவீதம், உள்நாட்டு விமானநிலையம்- பன்னாட்டு விமானநிலையம் இடையே 60 சதவீதம், மரோல் நாக்கா- ஆரே காலனி இடையே 97 சதவீதம் சுரங்க பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டதாக மும்பை மெட்ரோ ரெயில் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்குள் மெட்ரோ ரெயில் 3-வது திட்டப்பணிகளுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணி முழுமையாக முடிவடையும் எனவும் மும்பை மெட்ரோ ரெயில் கழகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்