ஆண்டிமடம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-11-26 22:15 GMT
ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா(32). இவர் புதிதாக வீடுகட்டி வருகிறார். இதனால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பின்புறம் தகர சீட்டுகளை கொண்டு வீடு அமைத்து அதில், தற்காலிகமாக தங்கியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டை பூட்டிவிட்டு புதிய கட்டிடத்தில் தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதா உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1½ லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது.

பின்னர் அவர் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்