இரியூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான ரங்கநாதர் சிலை கண்டெடுப்பு

இரியூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான ரங்கநாதர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

Update: 2019-11-26 22:45 GMT
சிக்கமகளூரு, 

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா பூவினகெரே கிராமத்தை சேர்ந்தவர் கிரிசாமி. விவசாயி. அவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் கிரிசாமி, தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது நிலத்துக்கு அடியில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. இதனால் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்தப்பகுதியில் குழி தோண்டப்பட்டது.

அப்போது அங்கு நிலத்துக்கு அடியில் பழமையான ரங்கநாதர் சிலையும், 3 சிவலிங்கங்களும் இருந்தன. இதனை பார்த்து கிரிசாமி மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியும், பரசவமும் அடைந்தனர். இதையடுத்து கிரிசாமி, அந்த சிலைகளை வெளியே எடுத்து சுத்தம் செய்தார்.

விவசாய நிலத்துக்கு அடியில் பழமையான ரங்கநாதர் சிலையும், சிவலிங்கங்களும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் பூவினகெரே கிராமத்துக்கு வந்து சாமி சிலைகளை பார்த்து சென்றனர். மேலும் அவர்கள் சிலைகளை வணங்கியும் சென்றனர்.

இதையடுத்து அந்த கிராம மக்கள், ரங்கநாதர் மற்றும் சிவலிங்கங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து அந்தப்பகுதி மக்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த் துறை அதிகாரிகள் பூவினகெரே கிராமத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘இது சுமார் 800 ஆண்டுகள் பழமையான சிலைகளாகும். இந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும், இந்த சிலைகளின் உண்மையான வரலாறு தெரியவரும்‘ என்றனர்.

மேலும் செய்திகள்