பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5,380 கோடி நிவாரணம்; முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு

மராட்டியத்தில் சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் ஏராளமான விளைபயிர்கள் நாசமானது. கிட்டத்தட்ட 34 மாவட்டங்களில் உள்ள 352 தாலுகாக்களில் 94.53 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

Update: 2019-11-25 23:54 GMT
மும்பை, 

விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இந்தநிலையில் மராட்டியத்தில் அரசியல் குழப்பம் காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சேதமடைந்த 2 ஹெக்டேர் நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.8 ஆயிரமும், தோட்டக்கலை பயிர்களுக்கு 2 ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரமும் நிவாரணம் அறிவித்திருந்தார். 

இந்தநிலையில் தற்போது முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தனது பணிகளை தொடங்கினார். நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 380 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதனை தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்து இருந்தார். கடந்த 2-ந் தேதி காபந்து முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த தேவேந்திர பட்னாவிஸ் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்