பணிநிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் - குறைதீர்வு நாள் கூட்டத்தில் கொசுப்புழு ஒழிப்போர் பணியாளர்கள் மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள கொசுப்புழு ஒழிப்போர் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2019-11-25 23:31 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளித்தனர். வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, உபகரணங்கள், சாதி சான்றிதழ் தொடர்பான கோரிக்கை மனுக்களை அவர்கள் வழங்கினர். இவ்வாறு 500-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து கொசுப்புழு ஒழிப்போர் பணியாளர்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 256 பேர் பணியாற்றி வருகிறோம். நாங்கள் கொசுப்புழு ஒழிப்போர் பணியாளர்களாக கடந்த 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் ரூ.280 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் எங்கள் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை. அது மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் ரூ.360 முதல் 420 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வு கேட்டு நாங்கள் பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் லாவண்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்