திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-11-25 23:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் திருப்பூர் பெரிச்சிபாளையம் பி.கே.ஆர். லே-அவுட் பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து (வயது 81), அவரது மனைவி சரஸ்வதி (78) ஆகியோர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வந்ததும் திடீரென மண்எண்ணெயை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து அந்த வயதான தம்பதி கூறியதாவது:-

எங்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் மணி. இவரது மகனும், எங்கள் பேரனுமான செல்வராஜ். கடந்த 2010-ம் ஆண்டு எங்களது பெயரில் பெரிச்சிபாளையத்தில் இருந்த 2¾ சென்ட் சொத்தை உயில் எழுதி வைக்கும்படியும், உங்களை நான் நன்றாக கவனித்துக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

அதன்படி நாங்கள் சொத்தை எழுதிக்கொடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் எங்களை கவனிக்கவில்லை. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம். எனவே சொத்தை ஏமாற்றிய பேரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுபோல் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள பூச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (51). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி செல்வி (45). இந்நிலையில் செல்வியின் உறவினரான கோவில்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரிடம் ரூ.3700 வட்டிக்கு வாங்கியுள்ளார். அதன்படி வாரந்தோறும் ரூ.400 கட்டி வந்துள்ளார்.

இவ்வாறாக ரூ.1,800 செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 2 வாரமாக வட்டி பணம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் உள்பட சிலர் சந்தானத்தை தாக்கியதாக தெரிகிறது.

இது தொடர்பாக மத்திய போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்யும் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்த சந்தானம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, மத்திய போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நேற்று ஒரே நாளில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்