படியூாில் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரியை கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் படியூரில் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரியை கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-11-25 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டர். அப்போது திருப்பூர் காங்கேயம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் காங்கேயம் பகுதியில் உள்ள படியூரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்து வருகிறோம். இங்கு படியூரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் அவருடைய மனைவி ஜீவிதா ஆகியோர் சோ்ந்து படியூர் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் பெரிய அளவில் கல்குவாரியை நடத்துகின்றனர். இந்த கல்குவாரியை அரசு அனுமதியின்றி முறைகேடாக நடத்தி வருகின்றனர்.

இந்த கல்குவாரியில் அதிக சக்திவாய்ந்த வெடி வைத்து பாறைகளை வெட்டி எடுத்து ஜல்லி, மண் போன்றவற்றை லாரிகளில் அனுப்பி விற்பனை செய்கின்றனர்.

இந்த குவாரிக்கு அருகில் குடியிருப்புகள் உள்ளதால் மேலும் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதால் அந்த பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து காணப்படுகிறது.

இந்த கல்குவாரியில் 50 அடிக்கும் மேல் பாறைகளை வெடி வைத்து வெட்டி எடுத்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால் பொதுமக்களை மிரட்டுகின்றனர். எனவே கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்