மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்தும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
தமிழகத்தில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தல் முறையில் மாற்றம் செய்து சமீபத்தில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. அதன்மூலம் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.
அரசு சுய லாபத்துக்காக மறைமுக தேர்தலை அமல்படுத்தியுள்ளது. இந்த விஷயத்திற்காக அவசர சட்டம் பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது. பெரிய அளவில் குதிரை பேரம் நடக்க, இந்த நடைமுறை வழி வகுக்கும். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது தான், இணக்கமான சூழல் ஏற்படும்.
கவுன்சிலர்கள் சேர்ந்து மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு இருக்காது. அவர்களால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்ததாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மறைமுக தேர்தல், பல முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கும் என்று கூறி நேரடி தேர்தல் முறையை அமல்படுத்தியது.
தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்துள்ளது. உரிய நோக்கத்துடன் மறைமுக தேர்தல் முறை அமல்படுத்தப்படவில்லை. அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அந்த முடிவு மக்களுக்கு விரோதமாக இருந்தால் அதில் தலையிடுவதற்கு கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது.
அதன் அடிப்படையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.