கோர்ட்டில் ஆஜராகாததால் பேராசிரியை நிர்மலாதேவி கைது - அமைச்சர் மிரட்டுவதாக பரபரப்பு புகார்
வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி. தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த இவர் தன்னிடம் படித்த சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவர்கள்3 பேரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்த பேராசிரியை நிர்மலாதேவி மன நலம் பாதித்தவர் போல் காணப்பட்டார். மேலும் தனது வீட்டில் திடீரென்று ரகளையில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே இந்த வழக்கு கடந்த 18-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி ஆஜராக வில்லை. நிர்மலாதேவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விசாரணைக்கு வரவில்லை என்று அவரது வக்கீல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பரிமளா, நிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை நேற்று கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நீதிபதி பரிமளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரைக்கு அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.
இது குறித்து நிர்மலா தேவியின் வக்கீல் பசும்பொன் பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ’நிர்மலா தேவிக்கு அதிக அச்சுறுத்தல் உள்ளது. இந்த வழக்கில் அரசியல் தலையீடு உள்ளது. ஒரு அ.தி.மு.க. அமைச்சர் அவரை மிரட்டுகிறார். இந்த வழக்கில் நிர்மலா தேவி நிரபராதி, அவர் நிச்சயம் விடுதலை ஆவார். அவர் சார்பில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளோம்.‘ என்றார்.