கால்வாய் கரையில் கட்டப்பட்ட கோவில் அகற்றம் பொதுமக்கள் 'திடீர்' போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

பொற்றையடி அருகே கால்வாய் கரையில் கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-25 23:00 GMT
தென்தாமரைகுளம்,

பொற்றையடியில் இருந்து சாமிதோப்பு வழியாக வரும் வெங்கலராஜன் கால்வாய் கரையில் ஒற்றைப்பனை இசக்கியம்மன் கோவில் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் கோவிலை அகற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பல்சன் போஸ், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து, தென்தாமரைகுளம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் அதிரடி போலீசார் நேற்று காலை பொற்றையடி அருகே கோவில் இருக்கும் பகுதிக்கு வந்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலின் கட்டிட பகுதிகள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்த சாமி சிலை ஒன்றை எடுத்த அதிகாரிகள், டெம்போவில் ஏற்றி அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து செல்ல முயன்றனர்.

பொதுமக்கள் போராட்டம்

அப்போது அந்த பகுதி மக்கள் சிலையை எடுத்து செல்லக் கூடாது. அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலையை எடுத்துச் சென்ற வாகனத்தின் முன்னே அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேறு பகுதியில் கோவில் கட்டி எப்போது வேண்டுமானாலும் இந்த சிலையை பெற்று கொள்ளலாம் என்று உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்