கலை பண்பாட்டுத்துறையில் விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி

கலை பண்பாட்டுத்துறையில் விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற உள்ளது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

Update: 2019-11-25 23:00 GMT
கரூர்,

கரூர் நாரதகான சபாவில் கலைப்பண்பாட்டுத் துறை சார்பாக மண்ணின் கலை விழா மற்றும் மாவட்ட கலை விருதுகள் வழங்கும் விழா போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-

உலக இசை தினம் தமிழகத்தில் 21 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. உலக நாட்டிய தினம், சர்வதேச ஓவியர் தினம், உலக நாடக தினம் ஆகியவை இந்த நிதியாண்டில் கொண்டாடப்பட உள்ளது. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் திட்டத்தின் கீழ் கிராமியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளின் அரசு மற்றும் கலை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவி

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், 1991-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கலைஞர்கள், கலையை பாதுகாக்கும் நோக்கில் கலை பண்பாட்டுத்துறையை உருவாக்கினார். அதன்பேரில் இயல், இசை, நாடக மன்றம் மூலம் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நல வாரியத்தில் 330 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு நலத்திட்ட உதவியாக ரூ.76 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

விழாவில் 40 கலைஞர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான இசைக்கருவிகளும், கலைமுதுமணி விருதுகள் 5 பேருக்கும், கலைநன்மணி விருதுகள் 5 பேருக்கும், கலைச்சுடர்மணி விருதுகள் 5 பேருக்கும், கலைவளர்மணி விருதுகள் 5 பேருக்கும், கலை இளமணி விருதுகள் 5 பேருக்கும் என 25 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் கலை பண்பாட்டுத்துறையின் திருச்சி மண்டல உதவி இயக்குனர் ஹேமநாதன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் ஆலம்தங்கராஜ், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர்கள் வி.சி.கே.ஜெயராஜ் (கரூர்), தமிழ்நாடு செல்வராஜ், சுற்றுலா அலுவலர் ஜகதீஸ்வரி, கரூர் நாரதகானசபா செயலாளர் சேதுராமன், குரலிசை கலைஞர் ச.பூ.தேவிகாராணி, ஜவகர் சிறுவர் மன்றத் திட்ட அலுவலர் பவுலின் செபஸ்டின்மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைமாமணி விருது

விழாவிற்கு பின்னர் அமைச்சர் க.பாண்டிய ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு முதல் ஜூன் 1-ந் தேதி செவ்வியல் கலைஞர்களுக்கு நிகராக நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும். நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் 33 ஆயிரத்து 500 பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 லட்சமாக இந்த ஆண்டு இறுதிக்குள் உயர்த்த மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத்துறை தொடர்பான தமிழி டாட் காம் என்ற இணையதளத்தை வருகிற வாரத்தில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். கலைஞர்கள் இதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து கலைக்குழுக்களுக்கும் விருது அளிக்கும் நோக்கில் ரூ.1 கோடி என்றிருந்த நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்-அமைச்சர் வழங்கியிருக்கிறார்.

கரூரில் ஏற்கனவே அகழாய்வு நடந்திருக்கிறது. வருகிற ஆண்டில் கரூரில் நல்ல பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு ஈரோடு கொடுமணல், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. கலை பண்பாட்டுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் விரைவில் நடக்க இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்