பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் ரூ.120 கோடி தருவதாக ஆசை காட்டினார் - சுயேச்சை வேட்பாளர் குற்றச்சாட்டு

இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலக ரூ.120 கோடி தருவதாக பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் ஆசை காட்டியதாக சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2019-11-25 22:45 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இடைத்தேர்தல் பிரசார களம் பரபரப்புடன் காணப்படுகிறது. ஒசக்கோட்டையில் பா.ஜனதா சார்பில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.வான எம்.டி.பி.நாகராஜ் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அதே கட்சியில் இருந்த சரத் பச்சேகவுடா களம் இறங்கியுள்ளார். இதனால் 15 தொகுதிகளில் ஒசக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஒசக்கோட்டை தொகுதியில் சரத் பச்சேகவுடா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

பா.ஜனதாவில் டிக்கெட் கேட்டேன். அக்கட்சி எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. சுயமரியாதை கொண்ட நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். என்னை விலைக்கு வாங்க பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் முயற்சி செய்தார். இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலக ரூ.120 கோடி கொடுப்பதாக ஆசை காட்டினார். அவரது சொத்து முழுவதையும் கொடுத்தாலும் நான் வாபஸ் பெற மாட்டேன். எனது சுயமரியாதையை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.

அவர் பிற கட்சிகளை சேர்ந்த முக்கியமான நிர்வாகிகளை பணம் கொடுத்து வளைத்து வருகிறார். ஒசக்கோட்டை மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். அவர்கள் யாரும் விலைபோக மாட்டார்கள். இந்த தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தொகுதி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முழு கவனம் செலுத்துவேன்.

இவ்வாறு சரத் பச்சேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்