இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு அளிக்காது - சித்தராமையா ஆரூடம்
இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு அளிக்காது என்று சித்தராமையா கூறினார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உப்பள்ளி,
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெறாவிட்டால், எடியூரப்பா அரசு ராஜினாமா செய்ய வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாங்கள் எதற்காக கேட்க வேண்டும். அது தேவை இல்லை. அவர்களாகவே ராஜினாமா செய்ய வேண்டும்.
இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு அளிக்காது. அந்த கட்சி தலைவர்களிடம் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் இதற்கு முன்பு அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தவன். அதனால் இதை சொல்கிறேன். அக்கட்சி பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதனால் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறும்.
பா.ஜனதா ஆட்சியை இழந்தால், நான் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறினேனா?. இல்லை, அவ்வாறு நான் கூறவில்லை. கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றால், காங்கிரஸ் கட்சி 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி.
அவ்வாறு வெற்றி பெற்றால், யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று எடியூரப்பாவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் அவர் மிகுந்த கவலையில் உள்ளார். அதனால் அவர் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமின்றி சீரற்ற முறையில் பேசி வருகிறார்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.