விளைச்சல்-வரத்து கடும் பாதிப்பு: சாம்பார் வெங்காயம் விலை வரலாறு காணாத உயர்வு - ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனை

விளைச்சல்-வரத்து பாதிப்பு எதிரொலியாக, சாம்பார் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனை ஆகிறது.

Update: 2019-11-25 23:30 GMT
சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு மராட்டியம் (சோலாபூர், புனே), கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி எனப்படும் நாசிக் வெங்காயமும், தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து சிறிய வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயமும் விற்பனைக்காக வரவழைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதித்தது. இதனால் வழக்கமான அளவை காட்டிலும் 50 சதவீத வெங்காயமே விற்பனைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே வருகிறது.

இதன்காரணமாக பல்லாரி வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. பல்லாரி வெங்காயம் விலையேற்றத்தால் சாம்பார் வெங்காயத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கியதின் விளைவு, சாம்பார் வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது. இதனால் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

விளைச்சல் குறைந்தபோதிலும், தேவை காரணமாக பல்லாரி வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ கடந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் சாம்பார் வெங்காயத்தின் விலையும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறிய தாவது:-

பல்லாரி வெங்காயத்தின் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்ந்து, தற்போது ரூ.120 வரை விற்பனை ஆகிறது. ஆந்திரா வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது. சாம்பார் வெங்காயத்தின் விலை தரத்துக்கு ஏற்ப ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை ஆகிறது. 50 முதல் 60 சதவீதம் வரை வரத்து பாதித்துள்ளதே சாம்பார் வெங்காயத்தின் விலையேற்றத்துக்கு காரணம். அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் பல்லாரி வெங்காயம் விலை ரூ.40-ம், சாம்பார் வெங்காயம் விலை ரூ.40-ம் உயர்ந்திருக்கிறது.

அதேபோல முருங்கைக்காய் விலையும் உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை ஆகிறது. 2-ம் மற்றும் 3-ம் தர சந்தைகளில் ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக காய்கறி விற்பனை ஆகிறது. அழுகும் பொருட்கள் என்பதால் காய்கறி மீதான விலையேற்றம் தொடருமா? என்பதை உடனடியாக கணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தெரு கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற வெளிச்சந்தைகளில் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனை ஆகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (ஒரு கிலோவில்)

பல்லாரி- ரூ.100 முதல் ரூ.120 வரை, உருளைக்கிழங்கு- ரூ.25 முதல் ரூ.30 வரை, கேரட்- ரூ.45 முதல் ரூ.50 வரை, பீன்ஸ்- ரூ.30, நூக்கல்- ரூ.40, சவ்சவ்- ரூ.20, பீட்ரூட்- ரூ.40, முட்டைக்கோஸ்- ரூ.25, பச்சை மிளகாய்- ரூ.30, குடை மிளகாய்- ரூ.50, இஞ்சி- ரூ.120 முதல் ரூ.130 வரை, சேனைக்கிழங்கு- ரூ.35, சேப்பங்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.45 வரை, கத்திரிக்காய்- ரூ.30, வெண்டைக்காய்- ரூ.40, அவரைக்காய்- ரூ.40, கோவைக்காய்- ரூ.20, கொத்தவரங்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, பாகற்காய்(பன்னீர்)- ரூ.40, பெரிய பாகற்காய் - ரூ.40, முருங்கைக்காய்- ரூ.200 முதல் ரூ.220 வரை, முள்ளங்கி- ரூ.25, வெள்ளரிக்காய்- ரூ.25, புடலங்காய்- ரூ.30, தக்காளி- ரூ.25, காலிபிளவர்(ஒன்று)- ரூ.30, பீர்க்கங்காய்- ரூ.35, சுரைக்காய்- ரூ.30, சாம்பார் வெங்காயம்- ரூ.130 முதல் ரூ.140 வரை, தேங்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, வாழைக்காய் (ஒன்று) - ரூ.8 முதல் ரூ.10 வரை.

மேலும் செய்திகள்