கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெற்கதிர் அடித்து நூதன போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெற்கதிரை தரையில் அடித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல்,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மேலும் அவர்களின் கையில் நெற்கதிர்களும் இருந்தன. பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கை நோக்கி செல்ல முயன்ற அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து தாங்கள் கொண்டு வந்த நெற்கதிர்களை தரையில் அடித்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பட்டியல் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி உள்ளிட்ட 7 பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.
அத்துடன் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கிவிட்டு வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவை உருவாக்கி அதில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்க்க வேண்டும் என்று கோரி கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். மேலும் இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அறுவடை காலத்தில் விவசாயிகள் கதிரடித்து கதிர்களில் இருந்து நெற்களை பிரிப்பது போல் நாங்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு நெற்கதிர்களை தரையில் அடித்து நூதன போராட்டம் நடத்தினோம் என்றனர். இதையடுத்து, கட்சி சார்பில் சிலர் மட்டும் சென்று கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.