ஆத்தூர் அருகே, கேரளாவுக்கு கடத்த முயன்ற 8½ டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல் - 7 பேர் கைது

ஆத்தூர் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 8½ டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-11-24 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌‌ஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்மணி, ஏட்டுகள் நாகராஜன், காளி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு லாரி மற்றும் லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரே‌‌ஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் லாரி மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த 8½ டன் எடையிலான 189 மூட்டை ரே‌‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகனங்களில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ரே‌‌ஷன் கடைகளில் இருந்து சேகரித்த ரே‌‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரே‌‌ஷன் அரிசியை கடத்த முயன்றதாக தூத்துக்குடி சவேரியார்புரத்தை சேர்ந்த ஜான்கென்னடி (வயது 41), தொம்மை ஆரோக்கியம் (44), பிரையன்ட்நகரை சேர்ந்த சுதாகர் (38), காந்திநகரை சேர்ந்த செல்வம் (42), புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (39), கேரள மாநிலம் எரிமேலியை சேர்ந்த டிரைவர்கள் ராகுல் (24), பாது‌ஷா (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அன்பு, நசீர் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சுதாகர் மீது ஏற்கனவே ரே‌‌ஷன் அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்